
உனக்கும் எனக்குமிடையிலான
இடைவெளிகள் குறுகிவிடாதபடி
நீ பூட்டிவைத்திருக்கும்
சிந்தனையைப் பற்றிப் பேசுவதற்கு
நற்கூலியுண்டு .
பதட்டமும் தயக்கமும் மிகுந்து
சீதனப் பற்றிப் பேசும் போது
நீ நழுவும் போதும்
உன் பெயர் முன்னிலைப்படுத்தப்படும் சபைகளில்
நீ ஓங்கி ஒலிக்கும் போதும்
பேராசையின் எச்சல்கள்
உன் அடர்ந்த தாடிக்குள்
மினு மினுப்பதைப் பார்த்திருக்கிறேன் .
மிக உயர்ந்த நாகரிகம் பற்றிய
உனது சிந்தையில் உள்ள
சீர்திருத்தவான்களும் அறிஞர்களும்
இருபத்தி நாலு மணி நேரமும்
தஸ்பமணி உருட்டுபவர்கள்
இஷா உளுவுடன்
முப்பது வருடங்கள் சுப்ஹூ தொழுதவர்கள்
மட்டுமே என்று கூறி
தாடி வைக்காத சில மனிதர்களையும்
முகம் மூடாத பர்தாக்களையும் பழிப்பாய்.
காஸா தெருக்களில்
இஸ்ரேலிய தாங்கிகள் விரைவதைப்பற்றிய
எனது அனுதாபங்களை
தாத்தாரியர்கள் பக்தாதை எப்படி அழித்தார்கள்
அந்தலூசிலிருந்து அராபியர்கள்
எவ்வாறு விரட்டப் பட்டார்கள் என்றும்
அற்புதமாய் விளக்குவாய்
ராத்திரி நீ கேட்ட "பயானி"லிருந்து
பெண்கள் கல்வி பறிக்கப்பட்டதுவும்
புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டதுமான
ஆட்சி மட்டுமே
சென்ற நூற்றாண்டின்
"ஐடியல் " ஆட்சியென்றாய்
திட்டமிடலும் போராட்டகுணமும்
ஒழுக்கமும் சகிப்புத்தன்மையுமுள்ள
இயக்கங்களும் போராட்டங்களும்
எப்படி திறன்குன்றிப்போகும்
என்று கேட்டப்போது
சமுதாய மாற்றம் பற்றிய
கட்டுக் கதையைப்
பேசுவதாய்க் குறிப்பிட்டாய்
என்னதான் இருந்தாலும் இடைவெளிகள்
சூத்திரங்களுக்குள் அடங்காத
சதை ,பிரச்சார ,வியாபார நெடிகளற்ற
வெள்ளைக்காகிதத்தில்
கறுப்புத்துணிபோன்ற இலக்கியத்தை
எம்மிருவருக்கும் பிடித்திருக்கிறது
23.02.2003
No comments:
Post a Comment